அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

புதன், 11 பிப்ரவரி, 2009

பெருகிவரும் தனிப்பள்ளிகளும்- அருகிவரும் ஒற்றுமையும்! [பாகம் 1]


தமிழகத்தில் ஒருகாலத்தில் ஒரு ஊருக்குசென்றால் அங்கே பெரும்பாலும் ஹனபி மத்ஹபை அடிப்படையாக கொண்ட பள்ளி ஒன்று இருக்கும். அவ்வூரில் ஷாபிமத்ஹப்பினர் கணிசமாக இருந்தால் அவர்கள் ஒரு பள்ளியை எழுப்பியிருப்பார்கள். ஷாபியாக்கள் விரல்விட்டு என்னுமளவுக்குதான் அவ்வூரில் இருந்தால் அவர்கள் வித்ரு தொழுகை நீங்கலாக ஏனைய தொழுகைகளை ஹனபிஜமாத்துடன் தொழுது கொள்வார்கள். அத்திப்பூத்தார்போல் சிலபகுதிகளில் அஹ்லே ஹதீஸ் பள்ளிகளும் இருந்தன.

இன்றைய நிலைஎன்ன? ஹனபி பள்ளி, ஷாபி பள்ளி- அஹ்லே ஹதீஸ்பள்ளி- ஜாக்பள்ளி- த.த.ஜ. பள்ளி, த.மு.மு.க. பள்ளி, இ.த.ஜ. பள்ளி இப்படி ஒவ்வொரு அமைப்பிற்கும் ஒருபள்ளிஎன்ற அளவுக்கு பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்படி ஆளுக்கொரு பள்ளிவாசல் கட்டிக்கொள்வது பற்றி மார்க்கஅடிப்படையில் கேள்வி எழுப்பினால்,

* ஹனபி-ஷாபி பள்ளிகளில் தவ்ஹீத்வாதிகளை நபிவழிப்படி தொழ அனுமதிப்பதில்லை.

*இப்பள்ளிவாசலில் மவ்லித்போன்ற பித்அத்கள் அரங்கேறுகிறது.என்பன போன்ற குற்றச்சாட்டுகள் தனிப்பள்ளி காண்பவர்களால் முன்வைக்கப்படுகிறது.

நபி[ஸல்]அவர்கள் மக்காவில் இருந்தபோது காபாவின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருப்போம். நபியவர்கள் மக்காவெற்றியின்போது முன்னூற்றி அறுபது சிலைகளை அப்புறப்படுத்தியதையும் நாமறிவோம். முழுக்க,முழுக்க சிலைகளால் நிரம்பியிருந்த மார்க்கம் காட்ட்டிதராத சீட்டியடித்தல், நிர்வாணமாக தவாப் செய்தல், போன்ற செயல்களை குறைஷிகள் அப்புனித வீட்டில் செய்துவந்த நிலையில், நபி[ஸல்]அவர்கள் மக்காவில் இருந்தவரைக்கும் காபாவில்தானே தொழுதார்கள். தனிப்பள்ளி எழுப்பவில்லையே? இன்றைக்குள்ள மத்ஹப்பள்ளிகளில் எந்த பள்ளியில் சிலையிருக்கிறது? எந்த பள்ளியில் சீட்டியடிக்கப்படுகிறது? எந்தபள்ளியில் அவலட்சணமான ஆடை அணிந்து தொழுகை நடைபெறுகிறது? ஆக தனிப்பள்ளி கட்டுவதற்கு பித்அத்கள் அரங்கேறுகிறது என்ற காரணம் ஏற்புடையதன்று.

ஒருவாதத்திற்காக, நபிவழிப்படி தொழுவதற்காக தனிப்பள்ளி எழுப்புதல் என்பதை சரிகன்டால் கூட, அஹ்லேஹதீஸ் பள்ளிவாசலோடு நிறுத்தப்பட்டிருக்கவேண்டும்.

*நபிவழியில் தொழஅனுமதிக்கும் அஹ்லே ஹதீஸ் பள்ளியிருக்கும் ஊரில் ஜாக் பள்ளி எதற்கு?

*நபிவழியில் தொழ அனுமதிக்கும் ஜாக்பள்ளி இருக்கும் ஊரில் த.மு.மு.க.பள்ளி எதற்கு?

*நபிவழியில் தொழ அனுமதிக்கும் த.மு.மு.க.பள்ளி இருக்கும் ஊரில் த.த.ஜ.பள்ளி எதற்கு?

*நபிவழியில் தொழ அனுமதிக்கும் த.த.ஜ.பள்ளி இருக்கும் ஊரில் இ.த.ஜ. பள்ளி எதற்கு?

இப்படி அமைப்புக்கொரு பள்ளி கட்டியதிலிருந்தே, நபிவழி தொழுவது மட்டும் நோக்கமல்ல. என்பதை புரிந்து கொள்ளலாம்.

மேலும், சில அமைப்புகள் தங்கள் கிளை/மாவட்ட/மாநில அலுவலகங்களில் தொழுகை நடத்துவதையும் பார்க்கிறோம். பள்ளிவாசலுக்கு செல்லாமல் இப்படி அலுவலகத்திலே தொழுகை நடத்துவது சரியா என்றால்? அதற்கு ஒரு ஆதாரம் காட்டப்படும். 'மஸ்ஜிதுன் நபவிதான் நபியவர்களின் தொழும் பள்ளியாகவும், அரசியல்,போர் உள்ளிட்ட அத்துணை விசயங்களையும் அலசும் இடமாகவும் இருந்தது' என்பார்கள். ஆனால் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை மறந்து/மறைத்து விடுவார்கள். அதாவது நபியவர்கள் தொழும் பள்ளிவாசலை ஏனைய பணிகளுக்கு பயன்படுத்தியது வேறு. பள்ளிவாசலுக்கு தொழ செல்லாமல் அலுவலகத்தையே பள்ளிவாசலாக நினைத்து தொழுவது என்பது வேறு.

எனவே, ஒரு ஊரில் ஒருபள்ளிவாசல் இருக்கும்நிலையில், அப்பள்ளி தொழவரும் மக்களுக்கு போதுமானதாக இல்லையெனில் அதை விரிவுபடுத்தலாம். அல்லது கூடுதல் பள்ளிகளை எழுப்பிக்கொள்ளலாம். பள்ளியிலிருந்து வெகுதொலைவில் உள்ளமக்கள் வக்துக்கு வரமுடியாத நிலையிருந்தால் விரும்பினால்,கூடுதல் பள்ளிகளை எழுப்பலாம்.[அழகான முறையில் ஒழுசெய்து தொழுகைக்காக பள்ளியை நோக்கி நடந்துவந்தால் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. ஒரு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது என்ற நபிமொழியும் உண்டு] வேறு எதற்காகவும் பள்ளிவாசலை கட்டிக்கொண்டு பிரிவதற்கு மார்க்கத்தில் ஆதாரமில்லை.

தொடரும்...

கருத்துகள் இல்லை: