அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வியாழன், 30 ஏப்ரல், 2009

உழைத்து வாழவேண்டும்! பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!!

மே 1 அன்று 'உலக தொழிலாளர் தினம்' கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளை அனுஷ்டிப்பது சரியா?தவறா என்ற ஆய்வுக்கு செல்லாமல், இந்த நாள் உலகெங்கிலும் உழைப்பின் சிறப்பை எடுத்தியம்புவதால் இந்தநாளில், இஸ்லாம் உழைப்புக்கு தரும் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொள்வதுதான் இந்த ஆக்கத்தின் நோக்கம்.

உலகமாந்தர்களில் உழைக்கும் வர்க்கம் ஒன்றுதான். ஆனால் உழைக்காமல் வாழும் வர்க்கம் பலஉண்டு. அடுத்தவர் உழைக்க அதில் வாழுபவர்கள் ஒரு ரகம். உழைக்க தெம்பிருந்தும் 'வெட்கத்தைவிட்டு' பிச்சை எடுத்து வாழுபவர்கள் ஒருரகம். படித்து பதவியில் இருப்பவர்களில் சிலர், லஞ்சம் என்ற பெயரில் கவுரவபிச்சை எடுப்பவர்கள் ஒருரகம்.உழைக்காமல் 'திருடி'வாழுபவர்கள் ஒருரகம். இப்படியான மக்கள் வாழும் நிலையில் இஸ்லாம் உழைப்பிற்கு உன்னதமான இடத்தைதந்து, அடுத்தவர் உழைப்பில் வாழாமல், அடுத்தவரை ஏய்க்காமல் உழைத்து வாழ்ந்தால் அதற்கும் நன்மையுண்டு என்று சொல்லிக்காட்டுகிறது.
உழைப்பின் முக்கியத்துவம்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்."
[நூல்;புஹாரி,1471]
பிச்சையெடுப்பதை காட்டிலும் உழைப்பு சிறந்தது;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்."
நூல்;புஹாரி,எண் 1427 ]
மேற்கண்ட இரு செய்திகளும் அடுத்தவர் உழைப்பில் வாழநினைப்பவர்களுக்கும், சுயமரியாதையை இழந்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்த நினைப்பவர்களுக்கும் சாட்டையடியாக இருப்பதை காணலாம்.
லஞ்சம் ஒரு வஞ்சகச்செயல்;
அல்லாஹ் கூறுகின்றான்;
2:188
وَلاَ تَأْكُلُواْ أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ وَتُدْلُواْ بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُواْ فَرِيقًا مِّنْ أَمْوَالِ النَّاسِ بِالإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ
அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.

கவுரவமான பதவியில் இருந்தபோதும் பேராசையின் காரணமாக லஞ்சம் வாங்குபவர்களிடம், லஞ்சம் கொடுக்கக்கூடாது எனபதை இவ்வசனம் சொல்லிக்காட்டி லஞ்சத்தின் வாசலை அடைக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக இவ்வசனத்தை கடைபிடிக்கவேண்டிய முஸ்லிம்களில் சிலர் தங்களுடைய அறியாமையின் காரணமாக லஞ்சம் கொடுத்து தங்களுடைய காரியத்தை முடித்துக்கொள்வதையும் பரவலாக பார்க்கிறோம். இந்த செயல் கண்டிப்பாக தடுக்கப்படவேண்டியதாகும்.
உழைப்பே உயர்வு;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" "ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்." [நூல்;புஹாரி,எண் 2072 ]
உழைத்து வாழ்ந்த சத்திய சகாபாக்கள்;
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே 'நீங்கள் குளிக்கக் கூடாதா?' என்று அவர்களிடம் கூறப்பட்டது. [நூல்;புஹாரி எண் 2071 ]
வியர்வை சிந்தி உழைத்த சத்திய சகாபாக்களை புறந்தள்ளி, மார்க்கத்தையே பிழைப்பாக்கி கொண்ட 'மார்க்க அறிஞர்களை' என்னவென்று சொல்வது..?
தனக்கு மட்டுமல்ல.தர்மம் செய்யவும் உழைத்த உத்தமர்கள்;
அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார். "நபி(ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி கட்டளையிட்டால், எங்களில் ஒருவர் கடைவீதிக்குச் சென்று, சுமைதூக்கி ஒரு 'முத்து' கூலியைப் பெற்று அதை தர்மம் செய்வார்! ஆனால், இன்று அவர்களில் சிலருக்கு ஓர் இலட்சம் தங்கக் காசுகள் உள்ளன!" [நூல்;புஹாரி எண் 2273 ]

உழைத்து வாழச்சொல்லும் மார்க்கத்தையுடைய, உழைத்துவாழ்ந்த நபிமார்கள், சத்திய சகாபாக்கள் வழியில் உண்மை முஸ்லிம்களாகிய நாம் உழைத்துவாழ்வோம். ஏனெனில், மிம்பர் மீதேறி உத்தம நபி[ஸல்] கூறினார்கள்;அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, 'உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது" என்றும் கூறினார்கள்.[புஹாரி]

முஸ்லிம்களின் கை எப்போதும், எதிலும் உயர்ந்த கையாக இருக்கவேண்டும். அதுதான் உயர்வின் அடையாளமும் கூட!

கருத்துகள் இல்லை: