அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 20 மார்ச், 2009

தாய்சொல்லை தட்டமாட்டான் தவ்ஹீத்வாதி! எப்போது....?


மனிதர்களாகப்பிறந்த ஒவ்வொருவரும் பாவங்களை செய்யக்கூடியவர்கள்தான். செய்யக்கூடிய பாவங்களுக்கு மத்தியில் ஒவ்வொருவருக்கும் வேறுபாடு இருக்கும். சிலவிஷயங்கள் பாவம் என்று தெளிவாகவே தெரிந்து கொண்டு செய்யும் பாவங்களும் உண்டு. உதாரணமாக, மது-மாது-புகைப்பழக்கம் இதுபோன்ற பாவங்களை செய்பவர்களிடம் 'உங்களின் இந்த செயல் பாவமா? அல்லது நன்மை பயக்கக்கூடியதா? என்று கேள்வி எழுப்பினால், இது தவறுதான்! பாவம்தான்! ஆனாலும் விட முடியவில்லை என்று கூறுவதை காணலாம்.
இன்னும் சில பாவங்கள் பாவம் என்று சமூகம் அறியாமலேயே செய்யக்கூடியவைகளும் உண்டு. அவைகளில் ஒன்றுதான் பெண்ணிடம் திருமணத்தின்போது, வரதட்சனை என்றபெயரில் பணமாக, பொருளாக, சொத்துக்களாக பெண்வீட்டாரிடமிருந்து பெறுவது. இந்த செயல் பரவலாக படித்தவர் பாமரர், சாதி- மதம் கடந்து பெரும்பான்மை மக்களை ஆட்கொண்டுள்ளது. இப்படி திருமணத்தின்போது பெண்ணிடம் ஒரு ஆண்மகன் கையேந்துவது சரியா? என்ற வினாவை இவர்களை நோக்கி நாம் முன்வைத்தால், இவர்கள் சொல்லும் பதில் 'ஊரு ஒலகத்துல யாரும் செய்யாததையா நாங்க செஞ்சுப்புட்டோம்' என்று சாதாரணமாக சொல்வதை காணலாம். இவ்வாறு அவர்கள் சொல்வதற்கு காரணம் வரதட்சனை என்பது சகஜம் அது ஒரு பாவமான செயல் அல்ல. என்பது அவர்களின் எண்ணம். நாம் இந்த ஆக்கத்தில் வரதட்சனை பாவம் என்று அறியாத மக்களை பற்றி எழுதவரவில்லை. மாறாக, வரதட்சனை வாங்குவது பாவம், அப்பட்டமான இறைக்கட்டளை மீறல், என்றெல்லாம் திருமறையின் வசனத்தை 'வீராவேசமாக' முழங்கிவிட்டு தனது திருமணத்தின்போது, 'தாய்சொல்லை தட்ட முடியவில்லை' என்று வரதட்சனை வாங்கி 'பித்'அத்' திருமணம் செய்யும் தவ்ஹீத் வாதி[வியாதி]களைத்தான் இந்த கட்டுரையின் மைய கருத்தாக வைத்துள்ளோம்.
அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்;
وَآتُواْ النَّسَاء صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.4:4

இந்த வசனம் அனைத்து தவ்ஹீத்வாதிகளுக்கும் அத்துப்படி. ஆனாலும் திருமண நேரத்தில் பெரும்பாலான தவ்ஹீத்வாதிகள் தடம்புரண்டு வழக்கமான வரதட்சனை திருமணம் செய்வது ஏன்? இப்படி கேட்டால்நானும் எவ்வளவோ முயற்ச்சி பண்ணுனேன் நபிவழியில் மஹர் கொடுத்துதான் திருமணம் செய்யனும்னு. ஆனா எங்கம்மா' டேய்ய்! நான் சொல்றமாதிரி ஊரு ஒலகத்துல நடக்குறது மாதிரி நீ கல்யாணம் பண்ணலைன்னா நான் செத்துருவேன் என்று பிடிவாதமா சொன்னாங்க! அதுனால வேற வழியில்லாம 'நிர்பந்தத்துல' அப்படி பன்னவேண்டியதா போச்சு! என்று சொல்வதை பார்க்கிறோம்.

பெற்றோரை கண்ணியப்படுத்தவேண்டும், அவர்களுக்குரிய கடமையை செய்யவேண்டும் என்பதை வேறு எந்த மதமும் சொல்லமுடியாத அளவுக்கு இஸ்லாம் அளவுக்கு அதிகமாகவே சொல்லிக்காட்டுகிறது. அல்லாஹ் கூறுகின்றான்;
وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاَهُمَا فَلاَ تَقُل لَّهُمَآ أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيمًا
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!17:23

இந்த அளவுக்கு பெற்றோரை கண்ணியப்படுத்துமாறு நமக்கு கட்டளையிடும் வல்ல இறைவன், இறைவனது- இறைத்தூதரின் கட்டளைக்கு மாற்றமான ஒன்றை செய்யுமாறு பெற்றோர் வற்புறுத்தினால், அப்போது நம் பெற்றோருக்கு கட்டுப்படாமல், நம்பெற்றோரையும் நம்மையும் இந்த உலகையும் மற்றும் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வுக்கே கட்டுப்படவேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்;
وَإِن جَاهَدَاكَ عَلى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."31:15

மேற்கண்ட இந்த வசனம் மட்டும் தவ்ஹீத்வாதிகளுக்கு மறந்ததேன்! அப்ப தவ்ஹீத் என்றால், தர்காவுக்கு செல்லக்கூடாது, பாத்திஹா ஓதக்கூடாது, தொழுகையில் விரலசைக்கணும், பள்ளிவாசல் சுவர் கீறல்விழும் அளவுக்கு ஆமீன் என்று அலரனும். இவைதான் தவ்ஹீத் என்ற குறுகிய வட்டத்தில் நாம் சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால் நபி[ஸல்] அவர்களால் உருவாக்கப்பட்ட சத்தியசகாபாக்கள், பெற்றோருக்கு பணிவிடை செய்வதிலும், எந்த குறையும் வைக்கமாட்டார்கள். அதே நேரத்தில் இறைக்கட்டளைக்கு மாற்றமான ஒன்றை பெற்றோர் செய்யத்தூன்டினால், பெற்றோரை புறக்கணிப்பார்கலேயன்றி, இறைக்கட்டளையை புறக்கனிக்கமாட்டார்கள். இதோ! ஸ'அத் இப்னு அபீவக்காஸ் அவர்களின் வாழ்க்கையில் ஒரு முன்மாதிரி;
நான்[ஸ'அத்] இஸ்லாமிய மார்க்கத்தை நிராகரிக்காதவரை என்னுடன் பேசமாட்டேன் என்றும், உன்னவும் பருகவும் மாட்டேன் என்றும் என்தாயார் சத்தியம் செய்துவிட்டார்.மேலும் என்தாய், உன் பெற்றோரிடம் நீ நல்லமுறையில் நடந்து கொள்ளுமாறு அல்லாஹ் உன்னை அறிவுருத்தியுள்ளான் என்று கூறுகிறாய். நான் உன்தாய். நான்தான் இவ்வாறு[ இஸ்லாத்தை விட்டுவிடுமாறு] கட்டளையிடுகிறேன்! என்று கூறினார். இவ்வாறு மூன்று நாட்கள் இருந்ததால் என்தாயார் மயக்கமுற்றுவிட்டார்கள். அப்போது அவரது உமாரா எனப்படும் மகன், என் தாயாருக்கு தண்ணீர் கொடுத்தார்.அப்போது என் தாயார் எனக்கெதிராக பிரார்த்தித்தார். அப்போது அல்லாஹ்,
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."
وَإِن جَاهَدَاكَ عَلى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."
ஆகிய வசனங்களை அருளினான். என்று ஸ'அத் இப்னு அபீவக்காஸ்[ரலி] அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் 4789. ஹதீஸாக பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸில், தன்னுடைய தாய் மூன்று நாட்கள் உணவருந்தாமல், பருகாமல் மயக்கமுற்றபோதும், ஸ'அத் [ரலி] அவர்கள், தன்னுடைய தாயின் கட்டளையைவிட இறைக்கட்டளைக்கு முக்கியத்துவம் அளித்த அந்த உறுதி இன்றைய தவ்ஹீத்வாதிகளிடம் காணாமல் போனதேன்..?

இறுதியாக உபதேசம் ஊருக்குத்தான்;பேசும் எங்களுக்கல்ல.என்று கருதுபவர்களே! இதோ! அல்லாஹ்வின்கூற்றை கவனியுங்கள்;


يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (61:2)كَبُرَ مَقْتًا عِندَ اللَّهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَநீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (61:3)

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை சொல்லிலும், செயலிலும் தவ்ஹீத்வாதிகளாக வாழ்ந்து மரனிக்கச்செய்வானாக!

கருத்துகள் இல்லை: