அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

செவ்வாய், 31 மார்ச், 2009

வாரித்தெளிக்கும் வாக்குறுதிகளும் வல்லோனின் விசாரணையும்!

கோடைக்காலம், குளிர்காலம், மழைகாலம் என்று மாறிவரும் பருவகாலங்களை போல் இது வாக்குறுதி காலம். தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டு திருமண[கூட்டணி] விவாகரத்து[கூட்டனிமுறிவு]கள் முடிவு செய்யப்பட்டு, படை பரிவாரங்களோடு பாமர மக்களை சந்தித்து அவர்களின் ஒரே சொத்தாக இருக்கக்கூடிய வாக்கு எனும் சொத்தை பறிக்க, 'சொத்தை' வாக்குறுதிகளை அள்ளித்தெளிக்க அரசியல்வாதிகள் கிளம்பிவிட்டார்கள். இந்த அரசியல்வாதிகள் அணியில் முஸ்லீம் சமுதாய அணிகளும் உண்டு.இந்த தேர்தலில் இலவச இணைப்பாக 'அரசியல் சாக்கடையை சந்தனமனம் கமழும் இடமாக மாற்றப்போகிறோம்' என்று புதிய அரசியல் அவதாரம் எடுத்துள்ள சமுதாய அமைப்புகளும் உண்டு. இவர்களில் அனைவருமே வாக்குறுதிகளை தந்தால்தான் வாக்குகளை அறுவடை செய்யமுடியும் எனவே, வாக்குறுதிகளை தாராளமாக வாரிவழங்க தயங்கமாட்டார்கள். ஏனெனில், ஜெயித்து அரியாசனத்தில் அமர்ந்துவிட்டால் வாக்களித்தவர்களுக்கு வழக்கம்போல 'அல்வா' கொடுத்துவிடலாம் என்ற நினைப்புதான். ஆனால் ஒரு முஸ்லீம் வாக்குறுதி விஷயத்தில் எப்படியிருக்கவேண்டும் இதோ அல்லாஹ் கூறுகின்றான்;

وَلاَ تَقْرَبُواْ مَالَ الْيَتِيمِ إِلاَّ بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّى يَبْلُغَ أَشُدَّهُ وَأَوْفُواْ بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْؤُولاً
அநாதைகள் பிராயமடையும் வரை, (அவர்களின் பொறுப்பேற்றிருக்கும்) நீங்கள், நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள், இன்னும் (நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்.17:34

வாக்குறுதியின் வகைகள்;
வாக்குறுதி இரு வகைப்படும். 1. மார்க்கத்திற்கு உட்பட்டது.2. மார்க்கத்திற்கு முரணானது.
இதில் மார்க்கத்திற்கு உட்பட்ட வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படல் வேண்டும். அதே நேரத்தில் மார்க்கத்திற்கு முரணான வாக்குறுதி தரக்கூடாது அப்படி தந்தால் அதை நிறைவேற்றக்கூடாது. உதாரணத்திற்கு ஒரு முஸ்லீம் நான் கோவிலை புனர் நிர்மாணம் செய்து தருவேன் என்று வாக்குறுதியளித்தால் அதை நிறைவேற்றக்கூடாது. நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்;
ஒருவர் ஒரு செயலை செய்வதாக வாக்குறுதி தந்த பிறகு அதைவிட சிறந்ததை கண்டால், சிறந்ததையே நிறைவேற்றுங்கள்.
நூல்;முஸ்லிம்.

சின்ன சின்ன வாக்குறுதியாயினும் நிறைவேற்றவேண்டும்;
அப்துல்லாஹ்இப்னு ஆமிர்[ரலி] அவர்கள் கூறுகிறார்கள்; நான் சிறுவனாக இருந்தபோது, எங்கள் வீட்டுக்கு நபி[ஸல்]அவர்கள் வந்தார்கள். நான் விளையாடிக்கொண்டிருந்தபோது என் தாயார், அப்துல்லாஹ்வே! இங்கே வா உனக்கு ஒரு பொருள் தருகிறேன் என்றார்கள். அப்போது நபி[ஸல்] அவர்கள் என் தாயாரிடம், உண்மையிலேயே உமது மகனுக்கு தருவீர்களா? எனக்கேட்டார்கள். அப்போது என் தாயார் ஆம்! என்மகனுக்கு தருவதற்காக பேரீத்தம்பழம் வைத்துள்ளேன் என்றார்கள்.அப்போது நபியவர்கள், நீங்கள் சொன்னபடி வழங்கவில்லைஎனில் வாக்குறுதி மாறியவராவீர் என்றார்கள்.
நூல்;

சகாபாக்கள் நிறைவேற்றிய வாக்குறுதி;
அனஸ்(ரலி) அறிவித்தார். என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர்(ரலி) பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றார். அவர் (திரும்பி வந்தவுடன்) 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் இணைவைப்பவர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை; இணைவைப்பவர்களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்திருந்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான். பின்பு உஹுதுப் போரின்போது முஸ்லிம்கள் தோல்வியுற்ற நேரத்தில் அவர், 'இறைவா! என் தோழர்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்" என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) முன்னேறிச் சென்றார். ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவருக்கெதிரில் வரக்(கண்டு), 'ஸஅத் இப்னு முஆத் அவர்களே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். என் தந்தை நள்ருடைய இறைவன் மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாடையை உஹுது மலையிலிருந்து பெறுகிறேன்" என்று கூறினார். ஸஅத்(ரலி) இதை நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு, 'அவர் செய்த (வீராவேசமான) போரை வர்ணிக்க என்னால் முடியவில்லை, இறைத்தூதர் அவர்களே!" என்று கூறினார். நாங்கள் அவர் உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம். மேலும், இணைவைப்பவர்கள் அவரின் உடல் உறுப்புகளைச் சிதைத்து விட்டிருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டிருக்கக் கண்டோம். அவரின் சகோதரியைத் தவிர வேறெவரும் அவரை (இன்னாரென்று) அறிந்து கொள்ள முடியவில்லை; அவரின் சகோதரி கூட அவரின் விரல்(நுனி)களை வைத்துத் தான் அவரை அடையாளம் காண முடிந்தது. "அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களிடையே உள்ளனர்." என்கிற (திருக்குர்ஆன் 33:23) இறைவசனம் இவர் விஷயத்திலும் இவரைப் போன்ற மற்ற உயிர்த் தியாகிகள் விஷயத்திலும் தான் அருளப்பட்டது என்றே நாங்கள் கருதி வந்தோம்.
நூல்;புஹாரி,எண் 2805

பயபக்தியுடையவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றுபவர்களே!

بَلَى مَنْ أَوْفَى بِعَهْدِهِ وَاتَّقَى فَإِنَّ اللّهَ يُحِبُّ الْمُتَّقِينَ
அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்). நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்.3:76 .

வாக்குறுதியை நிறைவேற்றாதவர்கள் நயவஞ்சகர்கள்;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய் சொல்வதும், வாக்குறுதியளித்தால் (அதற்கு) மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் (நம்பிக்கை) மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை. எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதைவிட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும்.
நூல்;புஹாரி,எண் 3178

பிரார்த்தனை;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 'அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துன}ப இல்லா அன்த்த' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும். (பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.) இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்துவிடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.
நூல்;புஹாரி,எண் 6306

வாக்குகளை அள்ள வாக்குறுதி அளிக்கும் முன் வல்ல இறைவனை முஸ்லிம்கள் அஞ்சிக்கொள்வதுதான் இம்மை மறுமை பயனளிக்கும்!

கருத்துகள் இல்லை: