அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

ரபியுல்-அவ்வல் மாதமும்-மவ்லிதும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ரபியுல்-அவ்வல் மாதம் வந்துவிட்டாலே, இருசாரார் கச்சைகட்டி கிளம்புவார்கள். ஒரு சாரார் 'இந்த மாசம் ஏதாவது தேத்துனாத்தான் உண்டு' என்று மவ்லிது கச்சேரிவாசிப்பவர்கள். இன்னொரு சாரார் 'இது பித்'அத்' மவ்லிது ஓதுபவர்கள் நரகவாதிகள் என்று பத்வா கொடுப்பவர்கள். இருசாராருமே நடுநிலையோடு மார்க்கத்தை அணுகுவதில்லை. முதல்சாராரின் வாதத்தை பார்ப்போம்.

#நாங்கள் நபி[ஸல்]அவர்களின்மீது நேசம்வைத்துள்ளோம். எனவே அவர்கள் பிறந்த இந்த மாதத்தில் அவர்களை புகழ்ந்து கவிபாடுகிறோம்


முதலாவதாக நபி[ஸல்]அவர்கள் ரபியுல்அவ்வல் பிறை 12.ல் தான் பிறந்தார்கள் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை. வரலாறுகளில் பல்வேறு கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பிரதானமானது ரபியுல்அவ்வல் ஒன்பது அன்று நபியவர்கள் பிறந்தார்கள் என்பதுதான்.

இறைத்தூதர்[ஸல்] மக்காவில் பனூ ஹாஷிம் கிளையில்  ரபீவுல் அவ்வல் மாதம், 9ஆம் நாள் திங்கட்கிழமை (கி.பி. 571 ஏப்ரல் மாதம் 20 அல்லது 22ம் தேதி) அதிகாலையில் பிறந்தார்கள். அது யானைச் சம்பவம் நடைபெற்ற முதலாவது ஆண்டு. மேலும் ~அனூ ஷேர்வான் என்ற கிஸ்ராவின் ஆட்சி முடிவுக்கு வந்த நாற்பதாம் ஆண்டு.
இக்கருத்தையே அறிஞர் முஹம்மது ஸுலைமான் உறுதிப்படுத்துகிறார். (ரஹ்மத்துல்லில் ஆலமீன்)

ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதாக இருந்தால் அவரின் பிறந்தநாள் உறுதியாக அறியப்பட்டிருக்கவேண்டும். பலமான, ஒத்தகருத்துடைய ஆதாரமில்லாமல் ரபியுல்அவ்வல் 12. என்று முடிவெடுத்தது எப்படி?

அடுத்து ரசூல்[ஸல்]அவர்களின்மீது நேசம் வைப்பது எப்படி என்றால் மவ்லிது கவிபாடி அல்ல. இதோ நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;

'உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்கள்.
நூல்;புஹாரி,எண் 15

நபி[ஸல்] வர்களின் மீது அன்பு செலுத்துவது என்பது அவர்களை நம் உயிரினும் மேலாக மதிப்பதுதான். இதோ சத்திய சகாபாக்கள் நபியவர்களை நேசித்த விதம்பாரீர்;

கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார்கள்;

நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். எனக்கு ஆஸ் இப்னு வாயில் என்பவன் சில திர்ஹம்கள் கொடுக்க வேண்டியிருந்தது. அதைக் கொடுத்து விடும்படி கேட்டு அவனிடம் சென்றேன். அவன், 'நீ முஹம்மதை நிராகரிக்காதவரை நான் உனக்குக் கடன் தீர்க்க மாட்டேன்" என்று கூறினான். நான், 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு உயிராக்கி எழுப்பும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்" என்று கூறினேன். அதற்கு அவன், 'அப்படியென்றால் நான் இறந்து மீண்டும் உயிராக்கி எழுப்பப்படும் வரை என்னைவிட்டுவிடு. அப்போது எனக்குச் செல்வமும் குழந்தைகளும் கொடுக்கப்படும். பிறகு நான் உன் கடனைத் தீர்ப்பேன்" என்று கூறினான்.
அப்போதுதான், 'எவன் நம்முடைய சான்றுகளை மறுக்கிறானோ, மேலும் 'பொருள் செல்வமும் மக்கள் செல்வமும் எனக்கு வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்' என்றும் கூறுகிறானோ அவனை (நபியே!) நீங்கள் பார்த்தீர்களா? அவன் மறைவான உண்மைகளை அறிந்து கொண்டானா? அல்லது கருணை மிக்க இறைவனிடம் ஏதேனும் உடன்படிக்கை செய்தானா? அப்படியொன்றுமில்லை. அவன் பிதற்றுவதை நாம் எழுதி வைத்துக் கொள்வோம். அவனுக்குத் தண்டனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்..." (திருக்குர்ஆன் 19:77-80) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது.
நூல்;புஹாரி,எண் 2425

இதுதான் உண்மையில் நபியவர்கள் மீது செலுத்தும் நேசமேயன்றி, 'நீங்கள்தான் பாவங்களை மன்னிக்கக்கூடியவர்' ' நீங்கள்தான் பாவங்களை மன்னித்து, மறைக்கக்கூடியவர்' என்று அல்லாஹ்வின் தண்மைகளை அல்லாஹ்வின் தூதரைநோக்கி பாடுவதல்ல என்பதை மவ்லிது அபிமானிகள் விளங்கிக்கொள்ளவேண்டும்.

இப்படி நாம் கூறினால் இவர்கள் அடுத்து ஒரு வாதம் வைப்பார்கள். அதாவது ஹஸ்ஸான் இப்னு தாபித்[ரலி] அவர்கள் கவிபாடினார்களே என்பார்கள். ஹஸ்ஸான்[ரலி] அவர்கள் பாடிய கவி என்ன?

ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்கள்;

மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர்(ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான்(ரலி) பள்ளிவாசலில் கவிபாடுவதை உமர்(ரலி) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான்(ரலி), 'நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி(ஸல்) அவர்கள்) இருக்கும் போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்" என்று கூறிவிட்டு, அபூ ஹுரைரா(ரலி) பக்கம் திரும்பி, 'அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!" என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா(ரலி), 'ஆம் (செவியுற்றிருக்கிறேன்)" என்று பதிலளித்தார்கள்.
நூல்;புஹாரி,எண் 3212

ஹஸ்ஸான்[ரலி]அவர்கள் இஸ்லாமிய எதிரிகளை நபியவர்களின் அனுமதியோடு கவிநடையில் பதிலளித்தது, நபியவர்களை அல்லாஹ்வின் தன்மைகளை சூடி பாடக்கூடிய 'சுப்ஹானமவ்லிதுக்கு எப்படி ஆதாரமாகும்? சிந்திக்க மாட்டீர்களா? வேண்டுமானால், இந்த ஆதாரத்தை வைத்து புஷ், அத்வானி உள்ளிட்ட இஸ்லாமிய எதிரிகளை நோக்கி கவிதை நடையில் பதிலளியுங்கள் நாங்கள் தடுக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதரை நேசிப்பது என்பது அவர்களை இயன்றவரை அணு அணுவாக பின்பற்றுவதும் அவர்கள் மீது சலவாத்தை  அதிகமதிகம் மொழிவதும்தான்! அல்லாஹ் பூமியில் சிலவானவர்களை ஏற்படுத்தியிருக்கிறான். என்மீது சலவாத் கூறப்பட்டால் அதை எனக்கு எடுத்துக்காட்டுவார்கள் என்ற நபிமொழியின் மூலம் மரணித்துவிட்ட நபியவர்களுக்கு சொல்லப்படும் சலவாத்கள்தான் அவர்களை சென்றடையுமேயன்றி, மவ்லிது கவிகள் அல்ல. எனவே மவ்லிது என்பது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.

மவ்லிதும் மார்க்கம்தான் என்று வரட்டுவாதம் பேசாமல், மவ்லிதுகளில் உள்ள தவறான அர்த்தம்தரும் வார்த்தைகளை நீக்கிவிட்டு, பக்தி முலாம் பூசாமல் வேண்டுமானால் பொழுதுபோக்குக்கு வேண்டுமானால் பாடிக்கொண்டு திரியுங்கள்.

அடுத்து மவ்லிதை எதிர்ப்பவர்கள், ஒரு சாரார் அறிந்தோ-அறியாமலோ மவ்லிது ஓதுகிறார்கள் என்பதற்காக அவர்களை நரகவாதிகள் என்று சொல்வது அப்பட்டமான வரம்புமீரலாகும். ஏனெனில், யார் சொர்க்கம் செல்வர் யார் நரகம் செல்வர் என்று தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. நபியவர்கள் பாவங்களை மன்னிப்பார்கள் என்று கவிபாடினால் அது ஷிர்க். ஆனால் இறைவனின் தன்மையான தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கையிலெடுத்து ஒரு சாராரை நரகவாதிகள் என்று கூறுவதற்கு பெயரென்ன? எனவே, மென்மையாக எடுத்துச்சொல்லி தவறான செய்கையிலிருந்து மக்களை மீட்டெடுக்க முயற்சிப்பதே அறிவுப்பூர்வமானதாகும்.

(மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்க வாசிகள் சொர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள். பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் எனும் இறைநம்பிக்கை இருப்பவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் கறுத்தவர்களாக அதிலிருந்து வெளியேற்றப்பட்டு 'ஹயாத்' என்ற ஆற்றில் போடப்படுவார்கள். இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக், ஆற்றின் பெயர் 'ஹயா' என்று நபி(ஸல்) கூறினார்களோ என்று சந்தேகப்படுகிறார்... அவ்வாறு அவர்கள் அந்த ஆற்றில் போடப்பட்டதும் பெரும் வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள் முளைப்பது போன்று பொலிவடைவார்கள். அவை வளைந்து மஞ்சள் நிறமாக இருப்பதை நீர் பார்த்ததில்லையா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்கள்.
நூல்; புஹாரி,எண்; 22

அல்லாஹ்வே  மிக அறிந்தவன்.

2 கருத்துகள்:

தவ்ஹீத்வாதி சொன்னது…

ஷுஅப் பனீ ஹாஷிம் விற்கு அர்த்தம் பள்ளத்தாக்கு என கூறும் விதத்திலேயே அரபி மொழி தேர்ச்சி எவ்வளவு உண்டு என்பது தெளிவாகி விட்டது பிறகு உம்மின் கருத்துக்களை மக்கள் எப்படி ஏற்பது.ஷுஅப் விற்கு இங்கு அர்த்தம் கிளை என்பதை புரிந்தபின் நன்றாக ஆய்வு செய்தால் அன்த கப்பார் என்பது இல்திபாத் என்னும் இலக்கிய முறையில் இறைவனின் பக்கம் திரும்பி துஆ செய்தல் என்பது விளங்கும்.

முகவைஅப்பாஸ் சொன்னது…

அன்பு சகோதரருக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ஷுஅப் பனீ ஹாஷிம் விற்கு அர்த்தம் பள்ளத்தாக்கு என கவனக் குறைவாக எழுதிவிட்டோம். தவறுக்கு வருந்துகிறோம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. அதே நேரத்தில் நீங்கள் கூறிய, ''அன்த கப்பார் என்பது இல்திபாத் என்னும் இலக்கிய முறையில் இறைவனின் பக்கம் திரும்பி துஆ செய்தல்'' என்ற வாதத்திற்கு உரிய சான்றை வைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.