அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

இமயத்தின் உச்சத்தில் இசைப்புயல்; ஒரு இஸ்லாமியப்பார்வை!


சகோதரர் ஏஆர். ரஹ்மான் அவர்கள் உலகின் மிகச்சிறந்த விருது எனக்கருதப்படும் ஆஸ்கார் விருதை வென்றதையடுத்து, நாட்டின் பெரும்தலைவர்கள் முதல் சாதாரண குடிமகன் வரை வாழ்த்துமழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். சில இஸ்லாமிய சகோதரர்கள் கூட இச்செய்திக்கு முன்னிலை கொடுத்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ரஹ்மான் விருதுபெற்றதையடுத்து நாகூர் தர்காவில் சிலர் சிறப்பு பிரார்த்தனை நடத்தியதாகவும் செய்திகள் கூறுகின்றது.

சகோதரர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் பிறமதத்தில் பிறந்திருந்தாலும் அவர் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டவர். அந்தவகையில் பரம்பரை முஸ்லிம்களை விட அவர் சிறந்தவர். அந்தவகையில் அவர்மீது நமக்கு உயர்வான மதிப்பு எப்போதும் உண்டு. அதே நேரத்தில் அவர் சார்ந்துள்ள இசைத்துறை இஸ்லாம் தடுத்த ஒருதுறையாகும். மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒருதுறையில் ஒருமுஸ்லீம் வெற்றிபெற்றால் அதை ஏனைய முஸ்லிம்கள் ஊக்குவிப்பதோ, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதோ கூடாது.

இசை பற்றி இஸ்லாம் ;

அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார் 'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்)


நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.
நூல்;புஹாரி,எண் 5590

இறைத்தூதர்[ஸல்] அவர்களால் கண்டிக்கப்பட்ட ஒரு செயலை இன்று முஸ்லிம்களில் சிலர் செய்வதையும், சிலர் அந்த இசையில் மயங்குவதையும், சிலர் ஆதரிப்பதையும் பார்க்கிறோம். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் ஒரு பிரபல மவுலவி இசைக்கு வித்தியாசமான விளக்கம் கொடுக்கிறார். அதாவது ஒரு கருவியின் மூலம் இசைப்பது ஹராம் இல்லையாம், பல கருவிகள் கொண்டு இசைப்பதுதான் ஹராமாம். என்ன விந்தை பாருங்கள்; ஒரே ஒரு கீபோர்டை கொண்டு எத்துனையோ வகையான இசையை வெளிப்படுத்தலாமே! அப்படியானால் அது ஹலாலாகிவிடுமா? இப்படிப்பட்டவர்களைத்தான் மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் சொல்லியிருப்பார்களோ?

எனவே சகோதர்களே/சகோதரிகளே! இசை மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்பதற்கு ஏராளமான சான்றுகளை சமர்பிக்கமுடியும். படிப்பவர்களின் நேரம்கருதி, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப ஒரே ஒரு ஆதாரம் மட்டும் சமர்பித்துள்ளோம். ஷைத்தானின் மாயவலையான இசையிலிருந்து நம் சமுதாயத்தை அல்லாஹ் காப்பானாக!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். சரியாக சொல்லியுள்ளீர்கள். அந்த விருது யாருக்கு பெரிதாக படுதோ ! அவர்கள் மயிர்க்கால் சிலிர்க்கும். நம் நாட்டு தலைவர்கள் உட்பட. ஆனால் நமக்கு எது ? பெரியது என்று நன்றாகவே ! தெரியும் அல்லாஹ்வின் வேதமும் அவனின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் வாக்கு தான் நமக்கு உயிர் மூச்சு
மா சலாம்.
அப்துல் அசீஸ்.