அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

புதன், 24 நவம்பர், 2010

புகைவது நான்! எரிவது நீ...!

அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இந்த தலைப்பு பார்ப்பவர்களுக்கு புதுமையாக இருக்கலாம். ஆனால் இதில் சொல்லப்படும் தகவல்கள் என்னவோ பழமைதான்.தகவல்கள் என்ன தான் பழமையாக இருந்தாலும் அதில் உள்ள உண்மைகள் எக்காலத்திற்கும் பயனுள்ளவகையாகத்தான் இருக்கும். இறைவனும் முற்காலத்தில் வாழ்ந்த நபிமார்கள், நல்லடியார்கள், ஆகியோரின் வாழ்க்கை குறிப்புகளை நமக்கு ஏன் நினைவூட்டுகிறான் என்றால் அதில் நமக்கு நன்மை இருக்கிறது என்பதற்காகத்தான். எனவே கால வெள்ளத்தால் உண்மைகள் அடித்து செல்லப்பட்டாலும் அது அழியாதது. அதன் அடிப்படையில் புகை என்னும் போதை பழக்கம் குறித்து ஏற்க்கனவே நாம் அறிந்து இருந்தாலும் அது சமூகத்தில் உண்டாக்கும் விளைவுகளால் மீண்டும்,மீண்டும்,நினவு படுத் வேண்டியுள்ளது குறிப்பாக இளசுகளிடம்.முதலில் புகை பிடித்தல் தொடர்பாகவும்,அது ஏற்ப்படுத்தும் விளைவுகளையும் அறிந்துக்கொண்டு, இஸ்லாத்தின் பார்வையில் அதன் நிலை பாட்டிற்கு செல்வோம்.ஐரோப்பியரின் வருகை : ஆரம்பத்தில் செவ்விந்தியர்கள் மத்தியில் மட்டும் காணப்பட்டது இந்தப் பழக்கம். வட அமெரிக்காவில் பரவலாக பயிரிடப்பட்டிருந்த புகையிலை, ஐரோப்பியரின் வருகையைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்துக்கும் பரவியது என்பதுதான் இந்த உயிர்க்கொல்லிப் பயிரின் சரித்திரம்.இப்படி ஐரோப்பியர்களால் இறக்குமதி செய்யப்பட்ட நல்ல? பழக்க,வழக்கங்களில் இதுவும் ஒன்று.ஆறாவது விரல் சிகரட் : புகை! மனிதனுக்கு பகை! என்பது வெறும் ஏட்டளவில் உள்ள வாசகம் தான்.மாறாக நடைமுறையில் நாம் பார்ப்போமேயானால்,அது மனிதனுக்கு நண்பனாகவே திகழ்கிறது.எந்த அளவுக்கு எனில் மனிதனின் ஆறாவது விரலாக புகையிலையை உள்ளடக்கிய அந்த சிகரட் திகழ்கிறது. மனைவி இல்லாமலும் இருந்து விடுவேன் மயக்கமில்லாமல் [புகை] ஒரு வினாடி கூட இருக்கமுடியாது என்று சொல்லும் புகை பிரியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் 850 கோடி சிகரெட்டுகள் விற்கப்படுவதாகவும், அதில் 84 கோடி சிகரெட்டுகள் தமிழ்நாட்டில் விற்கப்படுவதாகவும் சிகரெட் நிறுவனங்கள் கூறுகின்றன. இதிலிருந்து மனிதனுக்கு மத்தியில் அது ஏற்ப்படுத்தியிருக்கும் தாக்கத்தையும், எந்த அளவுக்கு மனிதன் அதன் பால் ஈர்க்கப்படுகிறான் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.புகை பிரியர்களாக மாறிவரும் சிறுவர்கள் : பேனாவையும், பென்சிலையும், பிடிக்க வேண்டிய விரல்கள் சிகரட்டை பிடித்து வருவதுதான் வருத்தப்பட வேண்டிய செய்தி. குறிப்பாக பொருளாதாரத்தில் மேலோங்கியிருக்கும் வளைகுடா போன்ற நாடுகளில் இஸ்லாமிய சிறுவர்கள் இதற்க்கு அடிமை பட்டு இருக்கும் அவல நிலையை அவர்களின் பள்ளிகூடத்தின் அருகில் இருக்கும் பேருந்து நிலையங்களில் காணலாம்.சிறுவர்கள் அதன் பக்கம் விட்டில் பூச்சிகளாய் ஈர்க்கப் படுவதற்கு காரணம்,அது குறித்த விளைவுகளை அறியாததும் ஏதோ பொழுது போக்கு அம்சமாக அதை கருதுவதாலும் தான்.இது ஒரு பக்கம் இருந்தாலும் புதிய நாகரீகத்தின் தாக்கமும் முக்கிய காரணம் எனலாம். இப்படி காரணங்கள் பலவாறாக இருந்தாலும் அடிப்படை காரணம் என்று ஒன்று இருக்கிறது.அதுதான் பெற்றோர்களின் கவனிபாரின்மை.அவர்களின் கண்காணிப்பும் ,கவனிப்பும் சரிவர அமையுமானால் பெரும்பாலான சிறுவர்களை பாதுக்காத்து விடலாம் .பெண்களிடம் பெருகிவரும் புகை [போதை ] பழக்கம் : “புகை” என்னும் இந்த போதை பழக்கம் பெண்களிடமும் அதிவேகமாக பரவிவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் அதிகம் புகை பிடிக்கும் பெண்கள் வரிசையில் இந்தியப் பெண்களுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனாவும் பிடித்துள்ளன.இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதாகவும், அதில் பாதிக்கும் அதிகமானோர் புகைபிடிப்பதாகவும் கூறுகிறது ஆய்வுகள். அமெரிக்க புற்றுநோய் அமைப்பு மற்றும் உலக நுரையீரல் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் சேர்ந்து புகைபிடிக்கும் பெண்கள் குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, உலகம் முழுவதும் சுமார் 25 கோடி பெண்கள் புகை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். அவர்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே வளர்ந்த நாடுகளை சேர்ந்தவர்கள்.இந்த பழக்கம் உள்ளவர்கள் வரிசையில் இந்தியப் பெண்கள் மூன்றாவது இடத்தில் இருக்கின்றனர். இதனால் அவர்கள் அவர்கள் சுமார் 8 ஆண்டுகள் முன்னதாகவே இறந்துவிடுகின்றனர்.முதலிரண்டு இடங்களை அமெரிக்காவும், சீனாவும் பிடித்துள்ளன. அமெரிக்காவில் 2.3 கோடி பெண்களும், சீனாவில் 1.3 கோடி பெண்களும் புகை பிடிக்கின்றனர். பாக்கிஸ்தானில் பொருத்தவரைக்கும் சுமார் 30 லட்சம் பாகிஸ்தானிய பெண்கள் புகை பிடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.""தாங்கள் ஆண்களைப் போல எல்லாம் செய்ய வேண்டும் என்கிற நாகரிக மோகம், படித்த பெண்கள் மத்தியில் அதிவேகமாக இந்தியாவில் வளர்ந்து வருவதன் தாக்கம்தான் இது. புகைபிடிப்பதாலும் ஆண்களைப் போல உடையணிவதாலும் ஆண்களுக்கு சமமாகிவிடுவோம் என்கிற கருத்து ஏற்பட்டிருப்பது, அவர்களது உடல்நிலையைப் பாதிக்கும் என்பதுகூடத் தெரியவில்லை. பெண்கள் நலவாரியங்கள் இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை'' என்று ஆதங்கப்படுகிறார்கள் புற்றுநோய் எதிர்ப்புக் கழகத்தினர்.அறிந்தவர்களிடம் தான் அதிகம் : பொதுவாகவே எழுத படிக்க தெரியாதவர்களிடம் தான் எந்த ஒரு தீய பழக்கமும் பரவும்.காரணம் அதை பற்றிய அறிவு அவர்களிடம் குறைவு என்பதற்குதான்.மாறாக படித்து பட்டம் வாங்கி கிழித்ததாக சொல்பவர்கள், தான் இந்த புகை பிடிக்கும் போதைக்கும்,புகையிலையின் போதைக்கும் அடிமையாகிவருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. படிக்காத கிராமபுரத்தில் உள்ளவர்களிடம் குறிப்பாக பெண்கள் மத்தியில் புகையிலைப் பழக்கம் கணிசமாகக் குறைந்து வருவதாகவும், படித்த, நகர்ப்புற 30 வயதுக்குக் குறைவான பெண்கள் மத்தியில் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இப்படி ஆண்கள், பெண்கள்,சிறுவர்கள்,பெரியவர்கள்,என்று பாகுபாடு இல்லாமல் பெருகி வரும் இந்த போதை பழக்கத்தால் உண்டாகும் விளைவுகளை பார்ப்போம்...நுரையீரல் பலவீனம் : புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் உடல் உழைப்புத் திறனும் கணிசமாகப் பாதிக்கப்படுவதாகவும் புகைபிடிப்பதால் நுரையீரல் பலவீனப்பட்டு, அந்தப் பழக்கம் உள்ளவர்கள் மற்றவர்களைப் போல விரைந்து நடக்கவோ, மாடிப்படி ஏறவோ முடிவதில்லை மேலும், அவர்களது வேலை நேரத்தில் புகைபிடிப்பதற்காக வெளியில் செல்வதால், எடுத்துக் கொண்ட பணியில் முழுக்கவனமும் செலுத்த முடிவதில்லை.சிகரெட்டில் உள்ள புகையிலையில் நிக்கோடின் என்ற போதை பொருள் உண்டு. ரத்தத்தில் நேரடியாக கலந்தால் மனிதரை கொல்லத்தக்கது நிகோடின். புகையிலையில் நூற்றுக்கணக்கான வேதிபொருள் உள்ளது. புகைக்கும்போது தோல், நுரையீரலின் உட்பகுதியில் இவை ஒட்டுகிறது. மூச்சுக்குழலில் ஒட்டும் நுண் கிருமிகளையும், தூசிகளையும் அகற்ற முடியாது. இதனால் நாளடைவில் நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உருவாகும். துர்நாற்றம் வீசும் தலைமுடி, கறைபடிந்த பற்கள், இதயநோய், துர்நாற்றம் வீசும் வாய், தோல் சுருக்கமும் ஏற்படும்.ஆழ்ந்த சுவாசம்: மனிதன் ஒரு நிமிடத்தில் 14-15 முறை மூச்சை இழுக்கிறான். உணர்ச்சிவசப்படும் போது இவ்வேகம் அதிகரிக்கும். உடல் நலம் கெடும். சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டும்.சரியான பயிற்சியால் மூச்சு இழுப்பதை 6-4 முறை என குறைக்கலாம். நுரையீரல் எனும் இயந்திரத்தை நோயிலிருந்து காக்கலாம். நீண்ட நாள் வாழலாம் .ஆண்மைக்குறைவு : இந்த சிறு போதைக்கு அடிமையானவர்களுக்கு அடுத்த அதிர்ச்ச்சி என்னவென்றால்,ஆண்மையின்மை.புகையிலையில் உள்ள அந்த[நிகோடின்] நச்சு தன்மை விந்தணுக்களின் வீரியத்தை குறைத்து விடுகிறது.இதனால் குழந்தை பாக்கியம் என்பது கேள்விக்குறியாக்கி விடுகிறது.இது கணவன் -மனைவி மத்தியில் கசப்புணர்வை உண்டாக்கி விடுகிறது. குழந்தை இல்லையே என்ற தம்பதிகளின் ஏக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சில மருத்துவர்கள் கறக்க வேண்டிய கரன்சிகளை கச்சிதமாக கறந்து விடுகின்றனர்.மருத்துவமும் கைவிடும் பொழுது சில தம்பதிகளுக்கு மூட நம்பிக்கைகளில் மூழ்கிவிடும் சூழ்நிலையும் , குழந்தை வரம் வேண்டி சாமியார்களை தேடிச்சென்று தங்களின் கர்புகளை இழந்து விடும் சூழ்நிலையும் ஏற்ப்பட்டு விடுகிறது.ஆக நம்மிடம் உள்ள தீய பழக்க வழக்கங்களை சரி செய்து கொண்டாலே இப்படிப்பட்ட பிரச்சனைகளை பெரும் பாலும் தடுத்து விடலாம்.கருவறை குழந்தைக்கு ஆபத்து : புகைபிடிக்கும் பெண்கள் பிரசவத்தில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதுடன் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் வளர்ச்சி குறைந்து விடுவதாகவும் பெண்களுக்கு குறைபிரசவம், எடை குறைந்த ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அங்கஹீனம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர் .மூளை மங்கி விடுதல் : இந்த போதைக்கு அடிமையானவர்களை தாக்கும் புதிய நோயினை சமீபத்தில் கண்டுபிடித்து உள்ளனர்.இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் மார்க் வெய்ஸர் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில், புகைக்கு அடிமையானவர்களுக்கு புத்தி கூர்மை குறைகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.அதாவது மூளை மங்கி விடுகிறது.இஸ்ரேல் ராணுவத்தில் உள்ள 18 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.இந்த ஆய்வில், புகை என்னும் போதைக்கு அடிமையானவர்களை காட்டிலும், மற்றவர்கள் புத்திக் கூர்மையுடன் இருப்பது தெரிய வந்துள்ளது..மற்றவர்களின் புத்தி கூர்மை சராசரி புள்ளி 101 ஆக உள்ள நிலையில், புகை அபிமானிகளின் புத்திக் கூர்மை 94 ஆக உள்ளது.இவர்களுக்குள் சுமார் 7 புள்ளிகள் வீதம் வித்தியாசம் கண்டறியப்பட்டுள்ளது. .மேலும், ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டுக்கு மேல் புகைப்பவர்களுக்கு புத்திக் கூர்மையின் அளவு 90 புள்ளிகளாகவும், ஆரோக்கியமான மற்றும் நல்ல மனநிலையில் உள்ளவர்களின் புத்திக் கூர்மை 84 முதல் 116 புள்ளிகள் வரை காணப்படுவதாகவும் ஆய்வுகள் அறிவிக்கின்றன.இந்திய தேசிய மூளை ஆராய்ச்சி மையம் : புகை பிரியர்களுக்கு மூளை மங்கி விடுகிறது என்ற உண்மையை இஸ்ரேல் பல்கலை கழக ஆய்வு குழுவினர் கண்டறிந்ததை நாம் பார்த்தோம் . புகை பிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் மத்தியில் விளைந்த விளைவுகளை வைத்து மூளை பாதிப்பை இஸ்ரேல் ஆய்வு குழுவினர் கண்டறிந்தனர்.ஆனால் இந்திய மூளை ஆராய்ச்சி மையமோ! எப்படி?மூளை பாதிப்படைகிறது!என்று ஆய்வு செய்துள்ளனர் .அதில்,புகைலையில் உள்ள நச்சு தன்மையான நிகோட்டின் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை கோபமூட்டுகிறது.கோபத்தில் கொந்தளித்து போன அவைகள் மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள சுகாதாரமான செல்களை தாக்குகின்றன.இதனால் நரம்பு மண்டலம் பாதிப்படைகிறது. இதனால் பல விதமான நோய்கள் உண்டாகும் சூழ்நிலை உண்டாகிவிடுகிறது.இதன் ஒரு பகுதியாக மூளையிள் உள்ள"மைக்க்ரோசியா"என்ற முக்கிய செல்களும் பாதிப்புக்குலாகிறது.இதை அடுத்து இறுதியாக மூளையும் பாதிப்படைகிறது. என்ற உண்மையை கண்டுபிடித்து உள்ளனர்.புற்று நோயால் உயிரிழப்பு : புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் 25 விழுக்காடு நபர்கள் தங்களது அதிகமாகச் சம்பாதிக்கும் மத்திய வயதில் உயிரிழப்பு அல்லது கடுமையான நோய்க்கு ஆளாகிறார்கள். இதனால் அவர்களது குடும்பமும், அவர்களது பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.உலகம் முழுவதும் புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வரும் 2030ல் 1.7 கோடியைத் தாண்டும் என கணிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது 'எய்ட்ஸ், காசநோய், மலேரியா போன்ற நோய்களை விட புற்றுநோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. உலகில் எட்டு பேர் இறந்தால் அதில் ஒருவர் புற்றுநோயால் பலியாகும் நிலை உள்ளது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 1.2 கோடி மக்களுக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.இனி இஸ்லாம் இது குறித்து என்ன கூறுகிறது என்று காண்போம்...

இறைவனின் எச்சரிக்கை : மது பிரியர்கள் மட்டும் இருந்த அன்றைய காலத்தில் புகை அடிமைகள் இல்லாததால் அது குறித்து நேரிடையான எச்சரிக்கைகளை நம்மால் குர் ஆணிலும் ,ஹதீஸிலும் காணமுடியவில்லை.அதே நேரத்தில் புகை என்னும் போதை பழக்கம் உண்டாக்கும் விளைவுகளை வைத்து பார்க்கும் பொழுது இஸ்லாம் அதை வன்மையாக தடை செய்கிறது என்று அறிந்துக்கொள்ளலாம்.(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; "அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது" (நபியே! "தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும்" என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; "(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்" என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான். 2:219இந்த வசனத்தில் இறைவன் ஏன்? மதுவை தடை செய்கிறான் என்றால்,அதனால் ஏற்ப்படும் விளைவுகள் படு பயங்கரமானவை.சிறிதளவு நன்மை இருந்தாலும் தீமை அதிகம் என்பதால் தான் இறைவன் தடை செய்கிறான்.அந்த அடிப்படையில்,புகை பழக்கம் என்பதும் ஒரு போதை பழக்கம் தான். மது எப்படி மனிதனின் மூளையை மழுங்கடிக்க செய்து விடுகிறதோ!அதே வேலையை தான் இந்த புகையும் செய்கிறது.மது ஏற்ப்படுத்தும் விளைவுகள் உடனே காணமுடிகிறது.புகை ஏற்ப்படுத்தும் விளைவுகளை அவ்வாறு காணமுடிவதில்லை. அதுதான் வித்தியாசம்.போதையை உண்டாக்கும் ஒரு வகை செடியை தான் இந்த பழக்கத்துக்கு பயன் படுத்துகின்றனர். இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை நாம் ஆரம்பத்திலேயே பார்த்துவிட்டோம்.இதனால் மனிதனுக்கு எந்த நன்மையையும் இல்லை.அரசுக்கு தான் வருவாய் கிடைக்கிறது.ஒரு வகையில் வருமானம் அரசுக்கு கிடைத்தாலும் இந்த பழக்கத்தினால் பாதிக்கப்படும் பாவிகளுக்கு செய்யும் செலவு பன்மடங்கு அதிகம். எனவே மதுபானம் எந்த நோக்கத்திற்காக இறைவன் தடைசைகிறானோ அதே நோக்கமும் விளைவுகளும் புகை பிடிப்பதிலும், புகையிலையை பயன்படுத்துவதிலும், உள்ளடக்கி இருப்பதால் நிச்சயம் மார்க்க அடிப்படையில் தடை செய்யப்பட வேண்டிய செயல் தான்.வீணாகும் பொருளாதாரம் : பொதுவாகவே பொருளாதார விஷயத்தில் கவனத்தை கையாள சொல்லுகின்றான் இறைவன். மனிதனுடைய வாழ்க்கை பயணத்தை மாற்றி அமைப்பதில் பொருளாதாரத்துக்கு முழுமையான முக்கிகிய பங்குண்டு .வறுமையில் உழல் பவர்களையும், செழிப்பில் புரல்பவர்களையும் தடம் தடுமாறி பாதை மாறசெய்துவிடுகிறது இந்த பொருளாதாரம்.இதை கொண்டு நன்மையையும் அடைந்துக்கொள்ளலாம்.,இதை கொண்டு தீமையும் அடைந்துக்கொள்ளலாம்.இப்படிப்பட்ட தன்மைகளை கொண்ட இந்த பொருளாதாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது?அதை எவ்வாறு ஈட்டுவது?என்றெல்லாம் தனது தூதரின் மூலமாக மக்களுக்கு தெளிவு படுத்துகிறான் இறைவன்.இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக் கொடுப்பீராக மேலும், ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக் கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளாதாரத்தை ) விரையஞ் செய்யாதீர். 17:26இந்த வசனத்தில் இறைவன் பொருளாதாரத்தை வீணாக விரயம்மாக்காதீர்கள் என்று அறிவுரை பகருகிறான்.மாறாக வறுமையில்வாடும் சொந்த பந்தங்களுக்கும் ,ஏழைகளுக்கும் ,வழிபோக்கர்களுக்கும் பொருளாதாரத்தைக்கொண்டு உதவி புரியுங்கள்.மேலும் அது அவர்களுக்கு உரியது என்றும் கூறுகிறான்.நம்மால் விரையம்மாக்கப்படும் பொருள்களுக்கு உரியவர்கள் பூமியில்இருக்கிறார்கள்!என்ற ரீதியில் இறைவன் கூற்று அமைந்து இருக்கிறது.மனிதனுக்கு தீங்கு விளைவிக்க கூடிய துளியளவும் நன்மை இல்லாத புகை பழக்கத்திற்கு ,குறைந்தது ஒரு நாளைக்கு ரூ 40 வீதம் 1 பாக்கெட் சிகரட் ஒரு நபருக்கு என்றாலும் மாதத்திற்கு ஆகும் செலவு ரூ -1200 , ஒரு வருடத்திற்கு ஆகும் செலவு ரூ-14400 .ஆக இவ்வளவு பணம் ஒரு வருடத்திற்கு வீணாகிறது.விரயமாகும் ரூ-14400 பணத்தை மிச்சப் படுத்தி மேற்கூறிய வசனங்களில் இறைவன் சொல்லும் ஏழைகளுக்கும் , சொந்த பந்தங்களுக்கும், வழிபோக்கர்களுக்கும், வழங்கி அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். மார்க்கம் அனுமதித்த எத்தனையோ வழிகளில் அந்த பணத்தை செலவு செய்து மறுமை வெற்றிக்கு நன்மைகளை அள்ளி குவிக்கலாம்.இஸ்லாத்துக்குஇடமின்றி இச்சைக்கு இடம் கொடுத்து இப்படி நன்மையான காரியங்களை விட்டு விட்டு தீய காரியங்களுக்கு செலவு செய்து பொருளாதாரத்தை விரயமாக்கவேண்டுமா?விரயமாகியதர்க்காக இறைவனிடத்தில் குற்றவாளி கூண்டில் நிற்கவேண்டுமா? மறுமையில் இது தொடர்பான கேள்விக்கு பதில்சொல்லாதாவரை நகர முடியாதுஎன்பதை புரிந்து கொள்ளுங்கள் .பொருளாதாரத்தை புன்னியமில்லாதவைகளுக்கு செலவு செய்து விரயமாக்குபவர்களை ஷைத்தானின் சகோதரர்கள் என்று வேறு இறைவன் கூறுகிறான்.நிச்சயமாக விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். 17:27ஷைத்தானின் சகோதரர்கள், யாராக இருக்க வேண்டும்?அவர்களும் ஷைத்தானாகத்தான் இருக்கவேண்டும்.இறைவனின் கட்டளையை ஏற்க மறுத்த காரணத்தினால் தான் இறைவனுக்கு எதிரி ஆனான் ஷைத்தான்.நாமும் இறைவனின் இந்த கூற்றை மறுத்து அவனுக்கு எதிரானவர்களின் பட்டியலில் சேரவேண்டுமா? [இறைவன் பாதுகாக்க வேண்டும்] முடிவையும் ,மடிவைவையும் நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.தற்கொலைக்கு சமம் : இந்த விஷ பழக்கத்தினால் சிறிது சிறிதாக நம்மையே நாம் மாய்த்து வருகிறோம். இப்படி நம்மை நாமே மாய்த்துக்கொள்வது தற்கொலைக்கு சமமானது.விஷத்தை அருந்தி ஒரே அடியாக உயிர் துறப்பதற்கு பதிலாக இந்த பழக்கத்தினால் சிறிது சிறிதாக உயிர் துறந்து வருகிறோம் என்பது தான் உண்மை .இப்படி நம்மை நாமே கொலை செய்வதையும் இறைவன் கண்டிப்பதை பாருங்கள்..நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். 4:29இறை தூதரின் எச்சரிக்கை : வாயில் துர்நாற்றம் வீசக்கூடிய பொருளை கண்டு கோபம் கொள்கின்றனர் நபி ஸல் அவர்கள்."பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்டு விலம் அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் பல விதமான துர்வாடையுடைய தாவரங்கள் கொண்டு வரப்பட்டன. அது பற்றி நபி(ஸல்) அவர்கள் விபரம் கேட்டபோது அதிலுள்ள கீரை வகைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது.தம்முடன் இருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுக்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தத் தோழர் சாப்பிட விரும்பாமலிருப்பதைக் கண்டபோது 'நீர் உண்ணுவீராக! நீர் சந்திக்காத (பல விதமான) மக்களிடம் நான் தனிமையில் உரையாட வேண்டியுள்ளது. (இதன் காரணமாகவே நான் சாப்பிடவில்லை.)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புஹாரியில் [பாகம் 1, அத்தியாயம் 10, எண் 855 ]பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நபி மொழியில் ஒரு வித துர்வாடை வீசக்கூடிய கீரை வகையை நபி ஸல் அவர்களிடம் கொண்டு வரப்படுகிறது.அதை நபிஸல்அவர்கள் தனது தோழர் ஒருவருக்கு கொடுத்து. உன்னச் சொல்கின்றனர்.அவர் [வாடையை கண்டு] வெறுக்கவே நபி ஸல் அவர்கள் தான் சாப்பிடாததர்க்கு காரணம் ஒன்றையும் சொல்லுகிறார்கள் "நீ பார்க்காத மக்களிடம் நான் அதிகம் பேசவேண்டியுள்ளது". அதாவது வாடையோடு மக்களிடம் பேசினால் அவர்களுக்கு[எதிர் தரப்பினருக்கு] சிரம்மம் உண்டாகும் என்ற ஒரே காரணத்துக்காக அதை தவிர்த்தார்கள்.ஆனால் இன்று புகை பிரியர்கள் வாயிலிருந்து வரும் துர் வாடையை சுபஹானல்லாஹ் சொல்லி மாளாது. அவ்வளவு நாற்றம்.,தனது நண்பர்களிடம் பேசும் பொழுதும்,மற்றவர்களிடம் பேசும் பொழுதும் புகைத்துக்கொண்டு பேசுவது தான் பெரும்பாலும் காணமுடிகிறது.அதன் வாடை மட்டுமல்ல ,வாயால் இழுத்து விடும் புகையும் எதிராளிக்கு பாதிப்பபை உண்டாக்குவதையும் கவனத்தில் கொள்வதில்லை.அருகில் இருப்பவர்களுக்கும் புகைப்பவரால் நோய்கள் வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.எனவே தனக்கும்,அடுத்தவனுக்கும் கேடு உண்டாகும் இந்த கொடிய செயலை விட்டொழிக்க வேண்டும். இஸ்லாமும் அதை வன்மையாக கண்டிக்கிறது. பூண்டுக்கும் ,வெங்காயத்துக்கும் தான் நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் என்று சிலர் நினைக்கலாம் சொல்லப்பட்டதன் நோக்கம் என்ன?என்பதை புரிந்து கொள்வோமேயானால் குழப்பம் வராது.வானவர்களுக்கு சிரமம் : "வெங்காயம் வெள்ளை பூண்டு,சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வரவேண்டாம் .மனிதர்கள் எதன் மூலம் தொல்லை அடைகிறார்களோ அதன் மூலம் மலக்குகளும் தொல்லை அடைகின்றனர்."என்று நபி ஸல் கூறினார்கள்.என்ற செய்தி ஜாபிர் [ரலி]அவர்கள் அறிவிக்க முஸ்லிம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.வெங்காயம் வெள்ளை பூண்டு வாயில் உண்டாக்கும் துர் வாடையால் மனிதர்கள் மாத்திரம் அல்ல மலக்குகளும் துன்பமடைகின்றனர் .என்று இந்த நபி மொழி கூறுகிறது.வெங்காயம், வெள்ளை பூண்டின் வாடையாவது பொறுத்துக் கொள்ளலாம். பீடி ,சிகரட் நாற்றம் சொல்லவேண்டியதே இல்லை .ஒருவர் பாத்ரூமில் புகைத்துவிட்டு வந்த பிறகு அடுத்தவர் அதில் நுழைவாறேயானால், மூச்சி திணறி விடுவார்.அந்த நாற்றத்தில்.இப்படி வெங்காயம் ,பூண்டை விட மனிதனுக்கு அதிக நாற்றத்தையும்,துன்பத்தையும் கொடுக்கும் பீடி ,சிகரட்டினால் மலக்குகள் எந்த அளவுக்கு துன்பமடைவார்கள் என்பதை அதன் பிரியர்கள் எண்ணி பார்க்கவேண்டும்.சிலருக்கு இயற்கையாகவே வாயில் நாற்றம் இருக்கும்.சிலருக்கு பற்கள் சொத்தையாக இருந்தால் உண்ணக்கூடிய உணவுகள் அதிலே தங்கி துர் வாடை ஏற்ப்படுத்திவிடும். அந்த வாடையோடு இந்த புகை வாடை கலக்குமேயானால் சொல்லவேண்டியதே இல்லை உங்களுக்கே புரிந்து இருக்கும். சிலர் அனுபவித்தும் இருக்கலாம். எனவே தான் பல் துலக்கி வாயை சுத்தப்படுத்துவதை கூட ,கூடுதலாக வலியுருத்தியுல்லார்கள் நபி ஸல் அவர்கள்."ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார் புஹாரி பாகம் 1, அத்தியாயம் 11, எண் 880"என் சமுதாயத்திற்குச் சிரமமாம் விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்." என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" அபூ ஹுரைரா(ரலி) புஹாரி பாகம் 1, அத்தியாயம் 11, எண் 887எனவே மார்க்கம் தடை செய்யும் இந்த அருவருக்கதக்க செயலை விட்டொழிக்க வேண்டும் இல்லையேல் புகைவது சிகரெட்டாக இருந்தாலும் எரிவது நாமாகத்தான் இருப்போம்.ஆக்கம் :முபாரக்குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

கருத்துகள் இல்லை: