அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

வியாழன், 9 செப்டம்பர், 2010

திருவிடைச்சேரி படுகொலை; கடும் நடவடிக்கை தேவை!

கொல்லப்பட்ட இரு முஸ்லிம்கள்

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பரபரப்பாகும் திருவாரூர் மாவட்டம், இந்த தடவை அதற்கு முன்பாகவே பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.  வழக்கமாக பரபரப்பு உண்டாக்குபவர்கள் இந்துத்துவாக்கள்; ஆனால் இந்த முறையோ இஸ்லாமியர்கள்.

புனித மிகு ரமலான் நோன்பு இறுதிக் கட்டத்தை எட்டுவதற்கு உள்ளாகவே, ரமலான்  எங்களிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என காட்டியுள்ளனர் சில முஸ்லிம்கள். நோன்பு நோற்றிருக்கும் நிலையில் ஒருவன் வம்புக்கு வந்தால், 'நான் நோன்பாளி' என்று ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்ற நபிமொழியை புறக்கணித்து, வாக்குவாதம்; கைகலப்பு; கொலை என அனைத்தையும் அரங்கேற்றி ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கு இழுக்கை ஏற்படுத்தித் தந்ததோடு,

எனக்குப் பின்னர், உங்களில் ஒருவர் மற்றவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் நிராகரிப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள்.[புஹாரி] என்ற இறைத்தூதரின் பொன்மொழியை புறக்கணித்ததன் மூலம் , இன்று முஸ்லிம்களின் ரத்தத்தை ஓட்டச்செய்ததன் மூலம்  நிராகரிப்பாளர்களாய் மாறவும் துணிந்து விட்டனரோ..!


எதிரிகள் எம்மைக் கருவறுக்க கண்ணில் எண்ணைவிட்டுத் தேடிக்கொண்டிருக்க, அவனுக்கு ஓய்வளித்து என் கண்ணை நானே குத்திக் கொள்கிறேன்; என் உடம்பைப் போன்ற சகோதரனை நானே சவமாக்குகிறேன் என்று துணிந்து கொலை செய்து, முதன் முதலில் தனது சொந்த சகோதரனைக் கொன்று  கொலையை அறிமுகப்படுத்திய ஆதமுடைய மக்களில் ஆதிக் கொலைகாரனாக அவதாரமெடுத்து விட்டனரோ..!

கொலைக்கு யார் காரணம்; என்ன காரணம் என்பதில் ஆளுக்கொரு கருத்து அவனியில் ஆளுமை கொண்டாலும், இறையில்லத்தை விட்டுவிட்டு, வெறும் இல்லத்தை தொழுகையிடமாக கொண்டதுதான் பிரச்சினைக்கு காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். சில ஆண்டுகளுக்கு முன்னால்வரை, 'அவர்கள் அடித்தாலும்; நம்மை  தடுத்தாலும்; சஜ்தாவில் இருக்கும் போது நம்மை  குண்டுக் கட்டாக தூக்கி வெளியே போட்டாலும், மீண்டும் செல்வோம் அப்பள்ளிக்கு; மீட்டுவோம் நபிவழியில்; என்றல்லாம் சொன்ன நாம், இன்று அவை 'பித்அத்' அரங்கேறும் பள்ளிகள்; அவை இறையச்சத்தின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. எனவே நாம் முடிந்தால் எழுப்புவோம் தனிப் பள்ளி; இல்லையேல்  இயங்குவோம் இல்லத்தின் மாடியில் என்று கிளம்பியதன் விளைவு திருவிடைச்சேரியின் ரத்த ஓட்டம். எனவே முதலில் அறிஞர்கள் ஒன்று கூடி  அவசியமாக, அவசரமாக அலசவேண்டிய பிரச்சினை 'தனிப் பள்ளி அவசியமா என்பதே!

கொலையாளி சரணடைந்திருக்கிறார். அவர் 'தற்காப்புக்காகத்தான்'  சுட்டார் என்று கொலையாளிகளை தற்காக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்க தக்கதாகும். தற்காப்புக்காக சுட்டாரா..? அல்லது தறுதலையாகி சுட்டாரா என்பதை சட்டம் தீர்மானிக்கட்டும். மேலும் கொலைக்கு காரணமானவர்  'இயக்க'மானவரா.? அல்லது 'இயக்க'மற்றவரா என்பதையும் சட்டம் தீர்மானிக்கட்டும். ஆனால் அப்பாவி இஸ்லாமானவர் கொல்லப்பட்டதை  வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும், கொல்லப்பட்டவர்களில் தனது கட்சி கிளைச் செயலாளரின் மைத்துனரும் ஒருவர் என்பதால், அதிமுக பொதுச்செயலாளர் இந்த படுகொலையை வன்மையாக கண்டித்திருக்கிறார். கொல்லப்பட்டவர் எந்த மதமென்று ஜெயலலிதா பார்க்கவில்லை; ஆனால் தனது கட்சிக்காரர் என்றவுடன் கண்டிக்க முன்வருகிறார். ஜெயலலிதாவின் இந்ந்த மனப்பக்குவம் கூட எமது இயக்கத் தலைவர்களுக்கு இல்லை என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. நாமறிந்தவரை இக்கொலையை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டது தமுமுக மட்டுமே.

மேலும் இறந்தவர்களின் எண்ணத்திற்கேற்ப அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! இறந்தவரின் குடும்பத்தினருக்கு பொறுமையைத் தந்தருள்வானாக!! அவர்கள் இழந்ததைவிட சிறந்தததை அவர்களுக்கு பரிசளிப்பானாக!! இன்னுமொரு 'திருவிடைச்சேரி'  பயங்கரம் திருமார்க்கத்தின் பெயரால் நடந்திடாமல் பாதுகாத்திடுவானாக!!

கருத்துகள் இல்லை: