அவசர அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

பொது சொத்தை கைவைத்தால்....

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும்- சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடை நபி[ஸல்] அவர்கள் மீதும், அவர்களின் அடியொற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
மீண்டும் ஒரு இடைத்தேர்தலை தமிழகம் சந்திக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், தமது கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் நேர்காணலின்போது தேர்தலில் எவ்வளவு தொகை செலவு செய்வீர்கள் என்று தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் வினவுவதாக கேள்விப்பட்டுள்ளோம். அதை நிரூபிக்கும் வகையில், தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெற கோடிகளை இறைப்பதையும் நாம் காண்கிறோம். இதற்கு காரணம் இவர்களுக்கு வழங்கும் சம்பளத்தை வைத்து செலவு செய்ததை ஈடுகட்டி விடலாம் என்பதால் அல்ல. மாறாக, ஒன்றை விதைத்தால் பத்தை அறுவடை செய்யும் அதிகாரம் பதவிக்கு இருக்கிறது. அதன் மூலம் மக்களின் வரிப்பணத்தின் மூலம் உருவான அரசின் கஜானாவிலும் சுருட்டலாம். காண்ட்ராக்ட் என்ற பெயரில் சுருட்டலாம். பல்வேறு காரியங்கள் செய்து கொடுத்து கையூட்டு பெறலாம். இவ்வாறான பல்வேறு வழிகளில் மக்களின் உழைப்பால் உருவான வரிப்பணங்கள் இவர்களின் முதலீடாக இருக்கிறது. மேலும், அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கட்சியும் அடுத்த கட்சியை பற்றி ஊழல் செய்தவர்கள் என்று முழங்குவதுண்டு. அந்த அரசியல் கட்சிகளுக்கு இணையாக முஸ்லீம் சமுதாய அமைப்புகளும் தமது சக முஸ்லீம் அமைப்புகளை சுனாமியில் சுருட்டிவிட்டார்கள் என்பது போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்குவதை பார்க்கிறோம். அதே சுனாமி பணத்தில் இவர்கள் சீருடை வாங்கிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டுபவர்களும் உண்டு.[இத்தகைய பரஸ்பர குற்றச்சாட்டு உண்மையா பொய்யாஎன்பது அல்லாஹ் அறிந்தவன்] இது ஒருபுறமிருக்க, அரசியல் கட்சிகள் சுருட்டுவதற்கும் முஸ்லீம் அமைப்புகள் சுருட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது. அரசியல் கட்சிகளை பற்றிஅரசியல் வாதிகளை பற்றி மக்கள் தெளிவாக விளங்கி வைத்துள்ளார்கள். ஆனால் சமுதாய அமைப்புகளை பொருத்தமட்டில் எந்த சமுதாய அமைப்பாக இருந்தாலும் அவை 99 சதவிகிதம் முஸ்லிம்களின் உதவியை கொண்டு, அதிலும் குறிப்பாக வளைகுடாவில் இளமையை தொலைத்து வாழும் சகோதரர்களின் உதவியை கொண்டுதான் இயங்குகிறது என்பதும், இந்த சமுதாய அமைப்புகள் மீது அந்த அமைப்புகளில் அங்கம் வகிக்கும் சகோதரர்கள் அளப்பரிய நம்பிக்கை வைத்து தங்களின் பொருளாதாரத்தை வழங்குகிறர்கள் என்பதும் எவரும் மறுக்க முடியா உண்மையாகும். அப்படிப்பட்ட அமைப்பு எந்த நோக்கத்திற்காக வசூல் செய்தார்களோ அதற்கு செலவிடாமல் அமுக்கி கொண்டால், அல்லது வேறு வகைக்கு செலவு செய்தால் அவர்களின் மறுமை நிலை இதோ ஒரே ஒரு பொன்மொழி;

‏ நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் (போருக்குப்) புறப்பட்டோம்; அல்லாஹ் எங்களுக்கு வெற்றியளித்தான். அப்போ(ரின் போ)து நாங்கள் தங்கத்தையோ வெள்ளியையோ போர்ச் செல்வங்களாக அடையவில்லை. உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றையே போர்ச்செல்வங்களாகப் பெற்றோம். பிறகு நாங்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) 'வாதீ(அல்குரா)' எனுமிடத்தை நோக்கிச் சென்றோம். 'பனூ ளுபைப்' குலத்தின் ஜுதாம் குடும்பத்தைச் சேர்ந்த ரிஃபாஆ பின் ஸைத் என்பவர் அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்த (மித்அம் என்றழைக்கப்பட்ட) ஓர் அடிமையும் உடனிருந்தார்.நாங்கள் அந்தப் பள்ளத்தாக்கில் இறங்கியபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அந்த அடிமை எழுந்து அவர்களது சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது (எங்கிருந்தோ வந்த) ஓர் அம்பால் அவர் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு வாழ்த்துகள்! இறைவழியில் உயிர்த்தியாகம் செய்யும் பேறு அவருக்குக் கிடைத்ததே" என்று கூறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கைபர் போரில் கிடைத்த போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே (அனுமதியின்றி) அவர் எடுத்துக்கொண்ட போர்வை அவருக்கு நரக நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது" என்று கூறினார்கள்.(இதை கேட்ட) மக்கள் திடுக்குற்றனர். அப்போது ஒருவர் ஒரு/இரு செருப்பு வாரைக் கொண்டு வந்து, "(இதை) நான் கைபர் போரின்போது (பங்கிடுமுன்) எடுத்துக் கொண்டேன்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால்) "இவை, நரகத்தின் செருப்பு வார்/கள் (ஆகியிருக்கும்) என்று கூறினார்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).[முஸ்லிம்]

போரில் கிடைக்கும் பொருட்களை நபி[ஸல்] அவர்கள், போரில் பங்கெடுத்தவர்களுக்கு பகிர்ந்தளிப்பது வழக்கம். அவாறு பகிர்ந்தளிப்பதற்கு முன்பே ஒருவர் ஒரு போர்வையை சுருட்டிக்கொன்டதால் அவர் இறைவழியில் போரிட்டு உயிர்துறந்த போதும், அவர் சுருட்டிய போர்வை அவருக்கு நரகத்தை பெற்றுத்தருகிறது. மேலும் நபியவர்களுக்கு தெரியாமல் சுருட்டிக்கொண்ட இரு செருப்பு வார், திருப்பி தந்திருக்காவிட்டால் நரகத்தின் செருப்புவாராக ஆகியிருக்கும் என்றால், போரில் பங்கெடுத்தவர்களுக்கு அதில் கிடைக்கும் பொருட்கள் ஆகுமானவையாக இருந்ததும், அவைகளை உரியமுறையில் நபி[ஸல்] அவர்கள் பகிர்ந்தளிப்பதற்கு முன்னால் எடுத்துக்கொண்டதால் அந்த செயலின் காரணமாக நரகம் செல்கிறார்கள் எனில், பொது பணத்தை அல்லது சொத்துக்களை எந்த வித உரிமையும் இல்லாதவர்கள் சுருட்டிக்கொள்வது அல்லது தவறான வழியில் அந்த பொது சொத்தை பயன்படுத்துவது எங்கே கொண்டு பொய் சேர்க்கும் என்பthai மேற்கண்ட நபிமொழி நமக்கு உணர்த்தும் பாடமாக இருக்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ், பொது சொத்துக்கள் மற்றும் செல்வங்கள் விஷயத்தில் நேர்மையை கையாளக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!

கருத்துகள் இல்லை: