குழப்பவாதிகள் கவனத்திற்கு;
==========================
குழப்பத்தை உண்டாக்காதீர்கள்;
மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடை சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்" என்று கூறினார்.(7:85)
குழப்பம் கொலையை விடக் கொடியது;
(நபியே!) புனிதமான (விளக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; "அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்;. ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது. அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்;. உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;. இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்."(2:217)
பெரும்பான்மையாகி விட்டோம் என ஆடாதீர்கள்;
"மேலும், நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தி, (அவர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத்தடுத்து, அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள்; நீங்கள் சொற்பத் தொகையினராக இருந்தீர்கள்; அவன் உங்களை அதிக தொகையினராக்கினான் என்பதையும் நினைவு கூறுங்கள் - குழப்பம் செய்து கொண்டிருந்தோரின் முடிவு என்னுவாயிற்று என்பதைக் கவனிப்பீர்களாக" (என்றும் கூறினார்).(7:86)
குழப்பவாதிகளை அல்லாஹ் நேசிப்பதில்லை;
"மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிரு;நது மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை" (என்றும் கூறினார்கள்).(28:77)
குழப்பவாதிகளுக்கு தண்டனை;
அல்லாஹ்வுடனும் அவன் துதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டணை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்;. மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.(5:33)